Greenpeace South Asia வெளியிட்டுள்ள புதிய அறிக்கையானது, கரையோர நிர்வாகத்தில் தொடர்ந்து நீடிக்கும் “ஒப்புதல் இடைவெளியை” பதிவு செய்வதுடன், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலுக்கான கோரிக்கையையும் முன்வைக்கின்றது.
கொழும்பு, 28 செப்டெம்பர், 2026 — இலங்கை முழுவதும் வாழும் கரையோர மற்றும் பழங்குடி சமூகங்களுடன் விரிவான இலக்குக் குழு கலந்துரையாடலை நடத்திய பின்னர், ஒப்புதல் தொடர்பில் தொடர்ந்து காணப்படும் ஒரு இடைவெளியை Greenpeace South Asia அடையாளம் கண்டுள்ளது. இதில், நேரடியாக பாதிக்கப்படும் சமூக உறுப்பினர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளாமல், கொள்கை தொடர்பான தீர்மானங்களை பெரும்பாலும் அதிகாரிகளே எடுக்கின்றனர்.
“ஆலோசனையிலிருந்து சம்மதம் வரை: இலங்கையின் கடல்சார் மற்றும் கரையோர நிர்வாகத்தில் சமூகங்களின் குரல்கள்” என்ற இந்த ஆவணம், நீர்கொழும்பு, ரேகவ, வாகரை, கற்பிட்டி மற்றும் விடத்தல்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமூகங்களின் அனுபவங்களை பதிவு செய்வதுடன், வடக்கின் மன்னார் பகுதியை சேர்ந்த 186 மீனவ சமூகத்தினரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பையும் உள்ளடக்கியுள்ளது. இந்த அறிக்கையானது, அதிகாரிகள், தொடர்புடைய தரப்பினர், ஆதரவாளர்கள் மற்றும் ஊடகத்துறை பிரதிநிதிகள் முன்னிலையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.
கரையோர மற்றும் பழங்குடி சமூகங்களை நேரடியாக பாதிக்கும் விடயங்கள் தொடர்பில், அவர்களுக்கு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு பெரும்பாலும் குறைவாகவே இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகினன்றது. “தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னரே பல சந்தர்ப்பங்களில் அதுபற்றிய தகவல்கள் மக்களுடன் பகிரப்படுகின்றன, தொழில்நுட்ப ரீதியான திட்டமிடலின்போது உள்ளூர் மக்களிடம் காணப்படும் சூழலியல் அறிவு உரிய முறையில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை, மொழி மற்றும் நிர்வாகத் தடைகள் மக்களின் பங்கேற்பை கட்டுப்படுத்துகின்றன, அத்துடன், தமது நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் தீர்மானங்கள் குறித்து கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் இந்த சமூகங்களுக்கு குறைவாகவே உள்ளன” என்று அந்த அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கம் வலியுறுத்துகின்றது.
“தீர்மானங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பின்னரே அதில் பங்கேற்குமாறு கரையோர சமூகங்களிடம் நீண்டகாலமாக கோரப்படுகின்றது. கலந்துரையாடல் என்பது ஒரு திட்டம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பது மட்டுமே என்ற பொருளைக் கொண்டிருக்க முடியாது. இந்த சூழலியல் கட்டமைப்புகளுடன் வாழ்ந்து, அவற்றை சார்ந்திருக்கும் சமூகங்கள், தமது நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் அர்த்தமுள்ள வகிபாகத்தினை கொண்டிருக்க வேண்டும். கலந்துரையாடலில் இருந்து ஒப்புதலுக்கும், மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டத்திற்கு திணிக்கப்படும் பாதுகாப்பு அணுகுமுறையில் இருந்து, தலைமுறை தலைமுறையாக இந்த சூழலியல் கட்டமைப்புகளை பாதுகாத்து வரும் சமூகங்களுடனான உண்மையான பங்காளித்துவத்திற்கும் இலங்கை நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதல் என்பது சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பல்வகைமை நிர்வாகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். மாறாக, பின்னர் நினைவுகூரப்படும் ஒன்றாக அது இருக்கக்கூடாது.”
“கலந்துரையாடலுக்கு பதிலாக ஒப்புதலை மையமாகக் கொண்ட, உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையே அவசியமாகின்றது. அத்தோடு, கொள்கை தொடர்பான தீர்மானங்களை சமூகங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று மனித உரிமைகள் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான மெலனி குணதிலக வலியுறுத்தினார்.
குன்மிங் மொன்றியல் உலகளாவிய உயிரியல் பல்வகைமை கட்டமைப்பின் கீழ் இலங்கை தனது உயிரியல் பல்வகைமை தொடர்பான உறுதிப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடி மக்களும் உள்ளூர் சமூகங்களும் பங்கேற்பதையும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதையும் வலியுறுத்தும் இலக்கு 22 இடம்பெற்றுள்ளது. அத்துடன், 2026 ஒக்டோபர் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஆர்மேனியாவின் யெரெவானில் நடைபெறவுள்ள உயிரியல் பல்வகைமை தொடர்பான உடன்படிக்கையின் 17ஆவது பங்குதாரர்கள் மாநாட்டிற்கு (CBD COP17) முன்னதாகவும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கின்றது:
- சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதல் மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்புக்கான உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய தரநிலையை உருவாக்குதல்.
- சுற்றுச்சூழல் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பான தகவல்கள் சிங்களம் மற்றும் தமிழில் கிடைப்பதை உறுதி செய்தல்.
- தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் பாரம்பரிய மற்றும் உள்ளூர் மக்களின் சூழலியல் அறிவை அங்கீகரித்தல்.
- கடல்சார் மற்றும் கரையோர பகுதிகளை சமூகங்களுடன் இணைந்து நிர்வகிக்கும் முறையை முன்னோடியாக நடைமுறைப்படுத்துதல்.
- பாதிக்கப்படும் சமூகங்களுக்கு எளிதில் அணுகக்கூடிய குறைதீர்க்கும் முறைமைகளையும் சட்டரீதியான தீர்வுகளையும் வழங்குதல்.
- உயிரியல் பல்வகைமை மற்றும் காலநிலை தொடர்பான கொள்கைகளில் சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதல் மற்றும் சமூகங்களின் உரிமைகளை உள்ளடக்குதல்.
- உயிரியல் பல்வகைமை மற்றும் காலநிலை தொடர்பான நிதியை உள்ளூர் சமூகங்கள் நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
தமது கொள்கை உருவாக்கும் செயன்முறைகளில் நியாயமான கலந்துரையாடல், ஒப்புதல் மற்றும் பங்கேற்பு முறைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஏனைய நாடுகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளை, இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன.
Greenpeace South Asia அமைப்பானது, பழங்குடி மக்களையும் உள்ளூர் சமூகங்களையும் வெறுமனே தொடர்புடைய தரப்பினராக மாத்திரம் கருதாமல், உரிமையுடையவர்களாகவும், தமது பிரதேசங்களின் முதன்மையான பாதுகாவலர்களாகவும் அரசாங்கமும் தனியார் துறையினரும் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. செயற்திட்டங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மாற்ற முடியாத நிலையை அடைவதற்கு முன்னரே, அவர்களிடம் உள்ள அறிவும் அவர்களின் ஒப்புதலும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் இடம்பெற வேண்டும்.
ஊடக தொடர்புகளுக்கு :ஷானுக கடுபிட்டியகே
கிரீன்பீஸ் தெற்காசியா, ஊடக அலுவலர்
[email protected] || +94 72 644 4770
அனிதா பெரேரா
கிரீன்பீஸ் தெற்காசியா, பரப்புரையாளர்
[email protected] || +94 773925597
ஊடகங்கள் பின்வரும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் :
- சுருக்க அறிக்கை மற்றும் இணைப்புகள், இதில் உள்ளடங்குபவை:
- புகைப்படங்கள்
- கரையோர பகுதிகளை பாதுகாத்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பில், பழங்குடி மக்களும் உள்ளூர் சமூகங்களும் வழங்கும் சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதல் தொடர்பான நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொள்ளுமாறு கோரும் கடிதம்.
- கரையோர சமூகங்களுடனான இலக்குக் குழு கலந்துரையாடலுக்கான வினாக்கொத்து.
- கரையோர சமூகங்கள் தொடர்பான கலைச்சொற்கள்.
- தேசிய சுற்றுச்சூழல் சட்டமூலம் தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சுக்கு முன்வைக்கப்படும் பரிந்துரைகள்.
- சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதல் தொடர்பான கருத்துக் கட்டுரை.
- கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் மற்றும் இலக்குக் குழு கலந்துரையாடலில் பங்கேற்றவர்களின் மேற்கோள் கருத்துக்கள்.

