சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் மன்னாரில் ஒன்றுதிரண்ட கரையோர சமூகத்தைச் சேர்ந்த பெண் சமூக உறுப்பினர்கள்
(©Greenpeace South Asia, மார்ச் 2026)

கொழும்பு, 25 ஓகஸ்ட் 2026 – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து, கரையோர அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் நிலப் பயன்பாடு தொடர்பான தீர்மமானங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பாக, பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களிடமிருந்து சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலை (FPIC) பெற்றுக்கொள்வதற்கான வலுவான பொறிமுறைகளை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென கோரி, அமைச்சரிடம் நேரடியாகவும், அரசாங்க நிறுவனங்களிடமும், பாராளுமன்றத்தின் பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களிடமும் கிரீன்பீஸ் தெற்காசியா (Greenpeace South Asia) உத்தியோகபூர்வ கடிதமொன்றை கையளித்தது.

இலங்கையின் தேசியப் பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியின சமூகங்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கரையோர மற்றும் கடற்பிரதேசங்களுக்கும்  இதேபோன்ற பாதுகாப்பு நடைமுறைகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென கிரீன்பீஸ் தெற்காசியா வலியுறுத்துகின்றது. காரணம், இப்பகுதிகளில் வாழும் சமூகங்கள் நீண்டகாலமாக அங்குள்ள சுற்றுச்சூழல் கட்டமைப்புகள், கடற்றொழில் மற்றும் இயற்கை வளங்களுடன் நெருக்கமான தொடர்பையும் அவற்றை சார்ந்த வாழ்வாதாரத்தையும் கொண்டுள்ளன. உள்ளூர் சமூகங்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முக்கிய அம்சங்களான பாரம்பரிய அறிவை அங்கீகரித்தல், நிலம் மற்றும் வளங்களை பயன்படுத்துவதற்கான பாரம்பரிய உரிமைகளை உறுதிப்படுத்துதல், அத்துடன் இயற்கை வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பதை அங்கீகரித்தல் போன்ற விடயங்கள், குறிப்பாக கரையோரப் பகுதிகளில் வாழும் பலருக்கு இன்னும் சவாலாகவே உள்ளன.

“தீர்மானங்களை எடுத்துவிட்டு அதன்பின்னர் ஆலோசனை நடத்துவவதற்காக மக்களை அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இலங்கை தனது கடல் வளங்களை பாதுகாப்பதில் உண்மையிலேயே அக்கறையுடன் இருந்தால், தலைமுறை தலைமுறையாக கரையோர சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை பாதுகாத்து, அவற்றை சார்ந்து வாழ்ந்து வரும் மக்களுக்கு, அவை தொடர்பில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அர்த்தமுள்ள வகையில் கருத்துத் தெரிவிக்கும் உரிமை காணப்பட வேண்டும்,” என கிரீன்பீஸ் தெற்காசியாவின் பரப்புரையாளர் அனிதா பெரேரா தெரிவித்தார்.

பல சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் தொழிற்துறை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வளங்களை சுரண்டும் தொழில்கள் காரணமாக உள்ளூர் சமூகங்கள் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர், புறக்கணிக்கப்படுகின்றனர் மற்றும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.  பெருநிறுவனங்களின் இலாபத்திற்கும் வளங்களை சுரண்டும் செயற்பாடுகளுக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதுடன், உள்ளூர் பொருளாதாரங்களின் நலனுக்காக சமூகங்களால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது பங்கேற்பு அடிப்படையிலான அணுகுமுறைகளுக்கு அவசியமான ஆதரவை வழங்குவதற்கு தவறுவதன் மூலம், இலங்கை தனது சர்வதேச உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதில் அடிப்படையிலேயே தோல்வியடைந்து வருகின்றது.

பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர், அவை உள்ளூர் சமூகங்களின் நிலங்கள், நீர்வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கக்கூடியதாக இருக்குமாயின், அவற்றுக்கு முன்னதாகவே சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலை (FPIC) பெறுவதற்கான பொறிமுறைகளை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென கிரீன்பீஸ் அமைப்பு வலியுறுத்துகின்றது. பாரம்பரிய சூழலியல் அறிவு, பாரம்பரியமான நிலப் பயன்பாட்டு உரிமைகள் மற்றும் சமூக அடிப்படையிலான நிர்வாக முறைகளை அங்கீகரிப்பதானது, கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் வலுப்படுத்தும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


ஊடக தொடர்புகளுக்கு :

ஷானுக கடுபிட்டியகே
கிரீன்பீஸ் தெற்காசியா, ஊடக அலுவலர்

[email protected] || +94 72 644 4770‬

அனிதா பெரேரா
கிரீன்பீஸ் தெற்காசியா, பரப்புரையாளர்

[email protected] || +94 773925597

ஊடகங்கள் பின்வரும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் :

  • உலகளாவிய கடல் நீதிக்கான இன்றைய அழைப்பு : கடல்வள பாதுகாப்பிற்கு மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துதல்
    அறிக்கையின் ஆங்கில பிரதியும் நிறைவேற்றுச் சுருக்கமும்
    – நிறைவேற்றுச் சுருக்கம் மற்றும் இலங்கை தொடர்பான சம்பவ ஆய்வின் சிங்கள பிரதி
    – நிறைவேற்றுச் சுருக்கம் மற்றும் இலங்கை தொடர்பான சம்பவ ஆய்வின் தமிழ் பிரதி
  • இலங்கையின் கரையோர பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதல் (FPIC) பொறிமுறைகளை பரிசீலிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரும் கடிதம்.